265. அருள்மிகு பசுபதீஸ்வரர் கோயில்
இறைவன் பசுபதீஸ்வரர்
இறைவி கிருபநாயகி, அலங்கார நாயகி
தீர்த்தம் அமராவதி ஆறு
தல விருட்சம் வஞ்சி மரம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருக்கருவூர் ஆனிலை, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'கரூர்' என்று அழைக்கப்படுகிறது. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 650 மீட்டர் தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Karur Gopuramஒருசமயம் பிரம்மாவுக்கு தான் படைப்புத் தொழில் செய்வதால் ஆணவம் உண்டாயிற்று. அதனால் சிவபெருமான், காமதேனுவைக் கொண்டு ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார். காமதேனு பூவுலகில் வஞ்சி வனமாக இருந்த இத்தலத்திற்கு வந்து புற்று ஒன்றில் இருந்த சுயம்புவாக எழுந்த லிங்கத்தை வழிபட்டு படைப்புத் தொழில் செய்யும் வரம் பெற்றது. இதனால் பிரம்மாவின் கர்வம் நீங்கியது. அவருக்கு மீண்டும் படைப்புத் தொழிலை அருளினால் சிவபெருமான். பசுவான காமதேனு வழிபட்டதால் இத்தலம் 'ஆனிலை' என்று வழங்கப்படுகிறது.

Karur Amman2 Karur Amman1 Karur Moolavarமூலவர் 'பசுபதீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சற்று சாய்ந்த நிலையில் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். 'கிருபாநாயகி' (சௌந்தரவல்லி), 'அலங்கார நாயகி' என்னும் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன.

பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தேவசேனை சமேத ஆறுமுகப் பெருமான், நடராஜர், கருவூர்த் தேவர், பைரவர் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.

பதினென் சித்தர்களுள் ஒருவரான போகரின் சீடரும், பதினோறாம் திருமுறையில் வரும் திருவிசைப்பா பாடியவருமான கருவூர்த் தேவர் அவதரித்து இறைவனோடு ஒன்றாகக் கலந்த தலம்.

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான புகழ்ச்சோழ நாயனார் பிறந்து, வஞ்சி நகரமான கரூரை ஆட்சி புரிந்து, சிவத்தொண்டு செய்து முக்தி பெற்ற தலம்.

மற்றொரு நாயனாரான எறிபத்தர் பிறந்து, சிவபூஜைக்கான மலர்களை மிதித்த அரசனின் பட்டத்து யானையை தமது மழுவால் கொன்று, சிவனருளால் முக்தி பெற்ற தலம். இந்நிகழ்வு ஆண்டுதோறும் பங்குனித் திருவிழாவில் நிகழ்த்திக் காட்டப்படுகிறது.

காமதேனு, முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்ட தலம்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com